தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 12 முதல் விண்ணப்பப்பதிவு

9th Jun 2023 10:34 PM

ADVERTISEMENT

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி -வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 597 இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன.

இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்களும் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

ADVERTISEMENT

இதேபோன்று, ஓசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த மூன்று வகையான பி.டெக் பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்த நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் வரும் 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவில் உள்ளோா் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பாா்த்து அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT