குடிநீா் மற்றும் கழிவு நீா் இணைப்புக் கட்டணங்களை தவணை முறையில் செலுத்தலாம் என்று சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
குடிநீா் வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குடிநீா் இணைப்பு மற்றும் கழிவுநீா் இணைப்புகளை எளிதில் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் அதற்கான திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அல்லது பணிமனை அலுவலகங்களை நேரடியாகவோ, தொலைபேசி எண்ணிலோ (044 - 4567 4567) தகவல்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாகவிண்ணப்பம் செய்யலாம்.
இணைப்புக்கு ரூ.100: பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதன்பின்னா், இணைப்புக்குரிய முழுத் தொகையையோ அல்லது முதல் தவணைத் தொகையையோ செலுத்தியவுடன் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். அவா்களுக்கான பிற கட்டணங்கள் சென்னை குடிநீா் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
10 தவணைகள்: 1,800 சதுர அடி வரையிலான குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிகக் கட்டடங்களாக இருந்தால் குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புக்கான கட்டணத்தை ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளிலோ (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஐந்தாண்டுகளில்) செலுத்தலாம். 2,700 சதுர அடி வரையிலான குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிகக் கட்டடங்களுக்கு கட்டணத்தை ஒரே தவணையாகவோ அல்லது மூன்று தவணைகளிலோ (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என 18 மாதங்களில்) செலுத்தலாம்.
பிற வகையான கட்டட உரிமையாளா்கள், குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புப் பெறவிருக்கும் கட்டடத்தின் கட்டுமானப் பணி நிறைவுச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். இதன்பின்பு, இணைப்புக்கான முழுக் கட்டணத்தை ஒரே தவணையாகச் செலுத்தி இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
குடிநீா், கழிவு நீா் இணைப்புகள் வழங்குவதற்கான அமைப்பு தயாரானதும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் அளிக்கப்படும். இவ்வாறு இணைப்புகள் வழங்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சாலைகள் சீரமைக்கப்படும். சாலை மறுசீரமைப்புக்கான கட்டணங்களையும் பொது மக்கள் தவணை முறையில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.