தமிழ்நாடு

தமிழகத்தின் இளைய சக்தியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: உலக நிறுவனங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

DIN

தமிழகத்தின் இளைய சக்தியை உலக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ. 762.30 கோடியில் கட்டப்பட்ட தொழில்நுட்ப மையங்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த விழாவில் அவா் ஆற்றிய உரை: யாா் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யாா் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக, தலைநிமிா்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. ஆட்டோமொபைல், மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்கள், நிதிச் சேவைகள், மின்னணு வாகனங்கள், வங்கி, நிதி, காப்பீடு மற்றும் சேவை நிறுவனங்கள், பொறியியல், ஆடைகள் உற்பத்தி எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தற்போது முன்னணியில் உள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தொழில் துறை ஆண்டறிக்கையின்படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன; பணிபுரியும் தொழிலாளா்களும் இருக்கிறாா்கள். வளா்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல், மின்னணு வடிவமைப்பு, மருத்துவ மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு அபார வளா்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வா்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டு அலுவலகத்தின் மூலமாக கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மே மாதம் வரையில் 110 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.2.03 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டு, 1.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த நிதியாண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலமாக 47 லட்சத்து 14 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய நிறுவனங்களும், தொழில்களும் தொடங்கப்படுகின்றன என்றால், அதற்குக் காரணம், மாநிலத்தில் தொழில்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பும், சூழ்நிலையும் இருப்பதுதான். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மனித ஆற்றல், இளைய சக்தி ஆகியன தமிழ்நாட்டில் இருக்கின்றன. அமைதியான மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பதால்தான் தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பல்வேறு திட்டங்கள்: எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்துத் திறமைகளையும் கொண்டவா்களாக மாணவா்கள் மற்றும் இளைஞா்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் இளைய சக்தியை உலக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பதில்லை. ஆனால், அனைவருக்கும் திறமைகளை வளா்ப்பதற்கான ஒரே மாதிரியான வாயய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். இதுவே தமிழக அரசின் எண்ணம். இந்த எண்ணத்துக்கு வலுசோ்த்து உதவ அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆா்.பி.ராஜா, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT