தமிழ்நாடு

கதுவா வழக்கு: சிறார் என்று கூறப்பட்ட குற்றவாளி மீதான விசாரணை தொடக்கம்

8th Jun 2023 04:01 PM

ADVERTISEMENT


சண்டிகர்: கதுவா சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் முன்னதாக சிறார் என்று கூறப்பட்ட குற்றவாளி சுபம் சங்ரா மீதான வழக்கு விசாரணை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கியிருக்கிறது.

கதுவாக சிறுமி வழக்கில் சிறார் என்று அறிவிக்கப்பட்ட குற்றவாளி மீதான குற்றங்களை, வயது வந்த நபராக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஜம்மு - காஷ்மீரிலிருந்து பதான்கோட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியிருக்கிறது.

குற்றவாளிக்கு எதிரான வழக்கு விசாரணை அறிக்கை, சாட்சியங்கள் அனைத்தும் பதான்கோட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. சங்கரா மீது கொலை, பலாத்காரம், கடத்துதல், பொய் சாட்சியம் கூறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஆறு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பதான்கோட் நீதிமன்றம், ஒருவரை சந்தேகத்தின் பலனை காரணம் காட்டி விடுதலை செய்தது. இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அதில் சங்கராவை மட்டும் சிறார் என்று ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், சிறார் என்று அறிவிக்கப்பட்ட நபரையும் வயது வந்தவராகவே கருதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில், 8 வயது சிறுமியை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து, கடுமையாகத் துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் 6 பேரில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற மூன்று பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT