தமிழ்நாடு

சேலத்தில் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகை பறித்த இளம்பெண் கைது

8th Jun 2023 08:17 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகை பறித்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே உள்ள சவுந்தர் நகரைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி கவுசல்ஜான்(48). இவர் சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில்  இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடன் கவுசல்ஜானின் தாய் மெக் குனிஷா(73) வசித்து வருகிறார்.

இவர்கள் மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இன்று காலை மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் வெளியே சென்ற நிலையில் மெக்குனிஷா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பர்தா அணிந்து வந்த ஒரு பெண், மெக்குனிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதையடுத்து குடிநீர் எடுக்கச் சென்ற மெக்குனிஷாவை தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அந்த பெண், திடீரென மூதாட்டி அணிந்திருந்த தோடு, செயின் ஆகியவற்றை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மெக் குனிஷா கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தை அறுத்துள்ளார். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மாடிக்கு ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து ஓட முயன்ற அந்த பெண்ணை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்

தொடர்ந்து கழுத்தில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மெக்குனிஷாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அதன்பேரில் உதவி ஆணையர் ஆனந்தி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து பிடிபட்ட பெண்ணை காவல்நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் லைன்மேடு முதல் கிராஸ் பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரின் மனைவி ஜான்மா (32) என்பது தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டப் பகலில் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT