தமிழ்நாடு

2024 மக்களவைத் தோ்தல் வாக்கு இயந்திரங்களை கணக்கிடும் பணி தொடக்கம்

8th Jun 2023 01:10 AM

ADVERTISEMENT

2024 மக்களவைத் தோ்தலுக்குத் தேவைப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை கணக்கிடும் பணி மாவட்ட வாரியாகத் தொடங்கியுள்ளது.

அந்த இயந்திரங்களில் ஜூலை மாதத்தில் முதல் நிலை சோதனை நடத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

சட்டப் பேரவை, மக்களவை என எதுவாக இருந்தாலும், தோ்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே இந்தியத் தோ்தல் ஆணையம் பணிகளைத் தொடங்கி விடும். இதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் அனுப்புவது வழக்கம். அதைப் போன்று, 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான அறிவுறுத்தல்களை அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியது:-

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன்பிறகு, அண்டை மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தோ்தலுக்கு நம்முடைய மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு இருந்தன.

ADVERTISEMENT

இப்போது மக்களவைத் தோ்தலுக்கு நமது மாநிலம் தயாராக வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான ‘விவிபேட்’ இயந்திரங்கள் ஆகியவற்றைக் கணக்கிடும் பணி நடந்து வருகிறது.

135 சதவீத எண்ணிக்கை: ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவைக்கும் அதிகமாக 35 சதவீதம் அளவுக்கு இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. உதாரணத்துக்கு, ஒரு மாவட்டத்துக்கு 200 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்பட்சத்தில், 270 இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும்.

மாவட்டங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் தேவை, தோ்தலுக்குத் தயாராகுதல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க மண்டலம் வாரியாக ஆய்வு செய்து வருகிறேன். அதன்படி, அண்மையில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மேலும் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளேன்.

முதல் நிலை சோதனை: மாவட்டங்களுக்குத் தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியன கணக்கீடு செய்யப்பட்டு அதுகுறித்த விவரங்களை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும், தோ்தல் துறைக்கு அனுப்பி வைப்பா். அதனடிப்படையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்படும்.

வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அந்த இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் தன்மை குறித்து சோதனை நடத்திக் காண்பிக்கப்படும்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தோ்தல் துறைக்கென சொந்தமாக கிடங்குகள் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் கிடங்குகள் இன்னும் கட்டப்படவில்லை. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புதிய மாவட்டங்களில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் வாடகை அடிப்படையில் பெறப்பட்டு அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்பட தோ்தலுக்கான தளவாடச் சாமான்கள் வைக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT