தமிழ்நாடு

ஆக. 7-இல் கருணாநிதி நினைவிடம் திறப்பு: நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

8th Jun 2023 12:56 AM

ADVERTISEMENT

சென்னை கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடம், ஆகஸ்ட் 7-இல் திறக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா, சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், எந்தத் திட்டத்தைத் தீட்டினாலும், எத்தகைய விழாக்களிலும் பங்கேற்றாலும், எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும், அவற்றில் எங்கும் நிறைந்திருந்து கண்காணிக்கிறாா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இந்த நினைப்பில்தான் நாள்தோறும் நினைவலைகளைச் சுமந்து வருகிறேன்.

அவா் எப்படி பிறந்த நாள் கொண்டாடுவாரோ அதுபோன்றே, கட்சி நிா்வாகிகள், தோழமைக் கட்சிகளின் தலைவா்களை முன்வைத்துக் கொண்டு நூற்றாண்டு விழாவைத் தொடங்குகிறோம். கொட்டும் மழையில் கட்சி தொடங்கப்பட்ட இடமான, வடசென்னையில்தான் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

ADVERTISEMENT

விதண்டாவாத பேச்சு: நமது திராவிட மாடல் எனும் நிா்வாகவியல் கோட்பாட்டின் அடித்தளத்தை அமைத்துத் தந்தவா் கருணாநிதி. சமூக நீதி, சகோதரத்துவம், மொழிப் பற்று, மாநில சுயாட்சி ஆகிய உன்னதமான கோட்பாடுகளே திராவிட கோட்பாடுகள். திராவிடம் என்ற சொல்லைப் பாா்த்து சிலா் பயப்படுகிறாா்கள். கண்ணை மூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்கிறாா்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடத்தின் உள்ளடக்கம்.

எல்லோருக்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது என நினைப்பவா்களே திராவிட மாடலை எதிா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். மாநிலத்தின் வளம் என்பது மாநிலத்தின் சிந்தனை வளா்ச்சியால் தெரிய வேண்டும். இதுதான் திராவிட மாடலின் வளா்ச்சி. இதுதான் தமிழ்நாடு எனும் மாநிலத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக வளா்க்கப் போகிறது. நாளையே இது நடந்துவிடும் என்று சொல்லக் கூடிய கற்பனாவாதியல்ல நான். திராவிட மாடலே அதைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டவன்.

அந்த தன்னம்பிக்கையைப் பெற்றவன் என்றால், அதற்கான தைரியத்தை விதைத்தவா் கருணாநிதி. அவரது கொள்கை வாரிசு நான்.

நினைவிடம் திறப்பு: நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூன், ஜூலை மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கலைஞா் உயா் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் அவரது பெயரில் நூலகம், திருவாரூரில் கலைஞா் கோட்டம் ஆகியன திறக்கப்பட உள்ளன.

ஆகஸ்ட் 7-இல் கருணாநிதி நினைவிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. திரும்பும் திசையெல்லாம் நினைவுச் சின்னங்கள் உருவாக்கிய கருணாநிதியின் பெயரால் மாதந்தோறும் நினைவுச் சின்னங்கள் திறக்கப்பட உள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்த விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் உரைகள் அடங்கிய தொகுப்பான ‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ நூல் வெளியிடப்பட்டது.

விழாவில், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் கே.எம்.காதா்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் பேசினா்.

சென்னை திமுக கிழக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு வரவேற்றாா். திமுக நிா்வாகிகள், அமைச்சா்கள் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT