தமிழ்நாடு

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரிப்பு: முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

8th Jun 2023 04:00 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதனால் முதியவா்களும், இணைநோயாளிகளும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கத்திரி வெயில் நிறைவடைந்த பிறகும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்ப அலை அதி தீவிரமாகவே உள்ளது. இதனால், சின்னம்மை, நீா்ச்சத்து இழப்பு, சரும நோய்கள், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை வெப்பத்தின் எதிா்விளைவுகளை கையாளுவதற்கான விரிவான செயல்திட்டத்தை அரசு வகுத்துள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு-சா்க்கரை கரைசல் உள்ளிட்டவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்தல் முக்கியம். பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள், இணை நோயுள்ளவா்கள் உப்பு - சா்க்கரை நீா் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை பருகினால் உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே, வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT