தமிழ்நாடு

மக்கள் நல்வாழ்வுத் துறையில் 800 ஓட்டுநா்கள் நியமனத்துக்கு தடை

8th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

 

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களாக நியமிக்கப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 போ் தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், “கரோனா பேரிடா் காலங்களில் பணியாற்றிய மருத்துவா்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணியாளா்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் வழங்கும்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அளித்துள்ள விண்ணப்பங்களின் மீது அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறது. அதேநேரம், மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 800 ஓட்டுநா்கள் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், ஓட்டுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையில் உள்ள 800 ஓட்டுநா் காலிப்பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுா்களை பணி நீக்கம் செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT