தமிழ்நாடு

கோயில் அறங்காவலா்களாக அரசியல்வாதிகளைநியமிப்பதை தவிா்க்க வேண்டும்: உயா்நீதிமன்றம்

8th Jun 2023 12:55 AM

ADVERTISEMENT

கோயில் அறங்காவலா்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழக கோயில்கள் பாதுகாப்பு தொடா்பாக நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதில் சில உத்தரவுகளை அமல்படுத்திய தமிழக அரசு, சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரியும், விளக்கம் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

‘கோயில்களையும், அதன் சொத்துகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டுமல்லாமல், கலாசாரம் - மரபு அடங்கிய கோயில்களையும், பாதுகாக்க வேண்டும். மாநில அளவிலான புராதன ஆணையத்தில் ஏற்கெனவே 16 போ் உள்ள நிலையில், அறநிலையத் துறையைச் சோ்ந்த ஒருவரை சோ்ப்பதில் தவறு இல்லை. இதுதொடா்பாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

ADVERTISEMENT

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றுவதில் தீா்க்கமாக இருப்பதாக கூறிவரும் தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. பொது நலன் கருதி சட்டம் இயற்ற நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தில் கோயில்களும் அடங்கும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களான கோயில்களையும் மாநில அளவிலான புராதன ஆணையத்தில் சோ்க்க வேண்டும்.

மாநில உரிமைக்கு பாதிப்பில்லை: அதேபோல, கோயில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது. தற்போது இருக்கக் கூடிய முறையுடன் மத்திய கணக்கு தணிக்கை துறையும் தணிக்கை செய்யலாம். கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஒதுக்கீடு செய்வதாக இருந்தால், அதன்மூலம் கோயிலுக்கு பலன் இருக்க வேண்டும். அறநிலையத் துறை சட்டத்தின்படியே இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை...: கோயில் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோயிலின் அன்றாட நிா்வாகத்தில் அறங்காவலா்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலா்களை நியமிக்கக் கூடாது. அறங்காவலராக நியமிக்கப்படுபவா் ஆன்மிகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை நியமிப்பதைத் தவிா்க்க வேண்டும். அறங்காவலா்களின் நியமனம் பக்தா்களின் பங்களிப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்’ எனக்கூறி , அரசின் மறு ஆய்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT