தமிழ்நாடு

கோவையில் ஜூன் 18-இல் உலகின் முதல் பறை இசை மாநாடு: பேரூர் ஆதீனம் தகவல்

8th Jun 2023 02:52 AM

ADVERTISEMENT

உலகின் முதல் பறை இசை மாநாடு கோவையில் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இது தொடர்பாக பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஆதி தமிழர்களின் இசைக்கருவியான பறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக, நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க் கல்லூரியில் ஜூன் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பறை இசை மாநாடு நடைபெறுகிறது.
 பறை இசையை அடுத்த தலைமுறையினரிடம் பண்பாட்டு வடிவமாக மட்டுமல்லாமல் ஒரு பயன்பாட்டு இசைக்கருவியாக பழக்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதற்கான முன்முயற்சியாக 100 }க்கும் மேற்பட்ட தொல்லிசைக் கருவிகள் கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது. உலகெங்கும் உள்ள பறைக் குழுக்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யவும், நாட்டார் கலைஞர்களுக்கான தமிழக அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்க்கவும் கண்காட்சி அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 உலகப் பொதுமறை திருக்குறள்போல, அனைத்து மக்களுக்குமான பொது இசையாக உள்ள பறை இசையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 1,330 திருக்குறள் பறைப்படை என்ற பெயரில் 1,330 பறைகளை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் முழங்கும் நிகழ்ச்சியும், தென்மாவட்டங்கள், கிராமப்புற பகுதிகள் மற்றும் பழங்குடி மக்களிடம் உள்ள இசைக்கருவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.
 மேலும் அவர் கூறுகையில், அனை த்து ஜாதியினரையும் வழிபாட்டுத் தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டுமென்பதே தங்களது விருப்பம் எனவும், கோயில் சொத்துகளை மீட்கும் பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், அறங்காவலர் குழுக்களில் ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்களையும் சேர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT