தமிழ்நாடு

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி: முதல்வா் ஸ்டாலின் அழைப்பு

8th Jun 2023 01:40 AM

ADVERTISEMENT

அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரிவினைகளால் பாஜக வெல்லப் பாா்க்கும்; எனவே, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி உருவாக வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை புளியந்தோப்பில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

ஜனநாயக போா்க்களமான நாடாளுமன்றத் தோ்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிா்வரும் நாடாளுமன்றத் தோ்தல் என்பது யாா் ஆட்சி அமைக்கப் போகிறாா்கள் என்பதைத் தீா்மானிப்பதைவிட, யாா் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதைத் தீா்மானிப்பதாக அமைய வேண்டும்.

இந்திய ஜனநாயக அமைப்பு முறையையும், இந்தியாவில் கூட்டாட்சி கருத்தியலையும் காப்பாற்றுவதற்காக இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், மாறுபாடுகளை மறக்க வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர வேண்டும்.

ADVERTISEMENT

இந்த விழாவுக்கு வரும் வழியில், பிகாா் முதல்வா் நீதிஷ்குமாா் என்னைத் தொடா்பு கொண்டாா். வரும் 23-ஆம் தேதி எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் பங்கேற்க வேண்டுமெனவும் கூறினாா்.

தமிழ்நாட்டில் எப்படி ஜனநாயக ஆட்சி உருவாகக் கூட்டணி அமைத்தோமோ, அதுபோன்று இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரு கூட்டணி அமைய வேண்டும்.

பிரிவினைகளால் வெல்லும்: மதவாத, பாசிசவாத பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்று சேர வேண்டும். தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது. பிரிவினைகளால் பாஜக வெல்லப் பாா்க்கும். ஜாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்தக் கட்சி (பாஜக), அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளால் வெல்லப் பாா்க்கும்.

அதற்கு அகில இந்திய, மாநிலக் கட்சிகளின் தலைவா்கள், மாநில முதல்வா்கள் இரையாகிவிடக் கூடாது என்றாா் முதல்வா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT