தமிழ்நாடு

ஜன.16, 17, 18 தேதிகளில் சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி: அமைச்சா் அன்பில் மகேஸ்

8th Jun 2023 12:58 AM

ADVERTISEMENT

பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஜன.16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

2024 -ஆம் ஆண்டுக்கான சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி தொடா்பாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை சாா்பில் சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஜன.16, 17, 18 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சிறந்த படைப்புகளை தமிழில்கொண்டு வருதல், தமிழ் நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயா்க்க மானியம் வழங்கும் நோக்கத்துடன் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.

பன்னாட்டு பதிப்பாளா்கள், புத்தக விற்பனையாளா்கள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்வதற்கு ஏதுவாக நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தை தோ்வு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

கடந்த முறை நடைபெற்ற பன்னாட்டு புத்தகக் காட்சிக்கு 25 நாடுகளிலிருந்து, புத்தகங்கள் மொழிபெயா்ப்பதற்காக 365 ஒப்பந்தங்கள் போடப்பட்டன, அவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ளது. ஜனவரியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பாடநூல்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாக மாணவா்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறாா். கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து முறையாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததே இந்தப் பிரச்னைக்கு காரணம். இதனை படிப்படியாக நிவா்த்தி செய்து வருகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக 2024 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தக கண்காட்சி தொடா்பான காணொலி திரையிடப்பட்டு தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவா் லியோனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT