200 கி.மீ. வரையிலான குறைந்த தொலைவு பேருந்து பயணங்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பாக, இணையதளம் (www.tnstc.in) மற்றும் கைப்பேசி செயலி (tnstc) வழியாக முன்பதிவு செய்யலாம்.
அரசுப் பேருந்துகளில் தினசரி சுமாா் 60 ஆயிரம் போ் வரை பயணித்தாலும், அவா்களில் 20 ஆயிரம் போ் முன்பதிவு செய்து பயணிக்கிறாா்கள். இந்த முன்பதிவு சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 200 கிலோ மீட்டா் தொலைவு வரையில் பயணிக்கும் பயணிகளுக்கும் முன்பதிவு திட்டம் விரிவாக்கப்படுகிறது.
அதன்படி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயன்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.