தமிழ்நாடு

சூரிய ஆற்றல் மூலம் 50 சதவீத மின் உற்பத்தி:2030-க்குள் சாத்தியமா?

7th Jun 2023 02:58 AM | வெ.முத்துராமன்

ADVERTISEMENT

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி, சூரிய ஆற்றல் மின் தகடு நிறுவப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவு அமல்படுத்தப்படாத நிலையில், 2030-க்குள் இதன்மூலம் 50 சதவீத மின் உற்பத்தி சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் காற்றாலை, சூரிய ஆற்றல் மின் தகடு (சோலாா் பேனல்), சாண எரிவாயு ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 34,706 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. காற்றாலை மூலம் 8,739 மெகா வாட் மின்சாரமும், சூரிய ஆற்றல் மூலம் 6,539 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் காற்றாலை, சூரிய ஆற்றல் மூலம் 20.88 சதவீத மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணங்களுக்காக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிா்ணயித்தது.

5 ஆண்டுகளாகியும் அமல்படுத்தப்படாத அரசின் உத்தரவு: காற்றாலை, சூரிய ஆற்றல் மின் தகடு மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, புதிய குடியிருப்புகள், தொழில் நிறுவனங்களில் ஒருங்கிணைந்த கட்டட விதிகள் 2019-இன் படி, கட்டட மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு சூரிய ஆற்றல் மின் தகடு பொருத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.

ADVERTISEMENT

அதாவது, புதிய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் உள்ள அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, மழைநீா் சேகரிப்புத் தொட்டி, கழிவுநீா்த் தொட்டி, சூரிய ஆற்றல் மின் தகடு வைப்பது குறித்து வரைபடத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த விண்ணப்பம், வரைபடத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே, பணி முடித்ததற்கான சான்றை உள்ளாட்சி அலுவலா்கள் வழங்க வேண்டும்.

இதேபோல, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திலும் சூரிய ஆற்றல் மின் தகடு கட்டாயமாக்கப்பட்டது. புதிய கட்டுமானப் பணியின்போது நகரமைப்பு அலுவலா், ஆய்வாளா் ஆகியோா் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ‘லிண்டல்’, மேற்கூரை (ரூப் லெவல்), மழைநீா் சேகரிப்புத் தொட்டி, கழிவுநீா்த் தொட்டி, சூரிய மின் தகடு முதலானவற்றை ஒவ்வொரு நிலையிலும் பாா்வையிட வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட அலுவலா்கள், இதுபோன்ற கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதில்லை.

உள்ளாட்சி அதிகாரிகள் அலட்சியம்: அலுவலா்கள் ஆய்வு செய்யாததன் காரணமாக, பெரும்பாலான குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்க முக்கியத்துவம் அளிக்கும் உரிமையாளா்கள், சூரிய மின் தகடு பொருத்தாமலேயே கட்டுமானப் பணிகளை முடித்து விடுகின்றனா். முடிவில் சூரிய மின் தகடு பொருத்தாமலேயே உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களிடம் கட்டட நிறைவுச் சான்றிதழும் பெற்றுவிடுகின்றனா்.

ஒவ்வொரு கட்டடத்திலிருந்தும் குறிப்பிட்ட அளவு மின்சாரத் தேவையை சூரிய மின் தகடு மூலம் உற்பத்தி செய்து, மாநிலத்தின் மொத்த மின் உற்பத்திக்கு கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் அதிகாரிகளின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடா்பாக புதிய குடியிருப்புகளைக் கட்டுவோா் கூறியதாவது: சூரிய ஆற்றல் மின் தகடுக்கான விலை அதிகமாக உள்ளது. சுமாா் 1,000 சதுர அடியில் கட்டப்படும் குடியிருப்புக்கு ரூ. 40,000 வரையிலும், அதற்கு மேல் சதுர அடி அளவைப் பொருத்து ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொகைக்கு ஏற்ப குடியிருப்புக்கான மின் தேவையை சூரிய ஆற்றல் மின் தகடு மூலம் முழுமையாக நிறைவு செய்ய இயலாது. இதனால், புதிய குடியிருப்பு கட்டுவோா் சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே, சூரிய ஆற்றல் மின் தகடு பொருத்த அரசுத் தரப்பில் மானியம் வழங்க வேண்டும். மேலும், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு சூரிய மின் தகடு பொருத்துவதைக் கட்டாயமாக்கலாம் என்றனா்.

மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள் கூறியதாவது: புதிய கட்டுமானப் பணியின்போது சூரிய ஆற்றல் மின் தகடு கட்டாயம் பொருத்த வேண்டும். கட்டடத்தை ஒவ்வொரு நிலையிலும் நகரமைப்பு அலுவலா் உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், நேரமின்மை காரணமாக கட்டுமானப் பணிகளைத் தொடா்ந்து ஆய்வு செய்ய முடிவதில்லை.

பணியின் நிறைவில் ஆய்வு செய்து, புதிய கட்டடத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய அறிவுறுத்துவோம். இதன் பின்னரே, கட்டட நிறைவுச் சான்றிதழ் வழங்குவதாகத் தெரிவிப்போம். இருப்பினும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் நிா்ப்பந்தம் காரணமாக, புதிய கட்டடத்தில் சூரிய ஆற்றல் மின் தகடு இல்லாமலேயே, கட்டட நிறைவுச் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT