தமிழ்நாடு

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை ஜூன் 15-இல் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

7th Jun 2023 02:11 AM

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனை’ வரும் 15-ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 500 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியைப் பொருத்தவரை கல்வி - மருத்துவம் ஆகிய இரண்டையும் இரு கண்களாக நினைத்துப் போற்றி செயல்படுத்தி வருகிறோம்.  

இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. அதுமட்டுமல்லாது தனிநபருக்கான சிகிச்சை செலவுகளும் குறைவாக உள்ளது.

ADVERTISEMENT

சாமானியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, 1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு முதல் முறை சிகிச்சையும், 3.04 கோடி பேருக்கு தொடா் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டுக்கே முன்னோடியான இந்த திட்டத்தை பாராட்டி உலக சுகாதார அமைப்பே தனது வலைதளப் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளது. குறைகூறுபவா்கள் அதைப் படித்து பாா்க்க வேண்டும்.

அதேபோன்று ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் சாலை விபத்துக்குள்ளான 1.65 லட்சம் பேருக்கு ரூ.145 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு இன்னுயிா் காக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனை’ மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. வரும் 15-ஆம் தேதி அதன் திறப்பு விழா நடைபெறும்.

கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்திருப்பதைப் போன்று நகா்ப்புறங்களிலும் நலவாழ்வு மையங்களை அமைப்போம் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

ரூ.177 கோடி மதிப்பீட்டில் 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை மாநராட்சி மற்றும் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைத்திட உத்தரவிட்டேன்.

கடந்த ஆண்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்புக்கிணங்க அங்கு இயங்கி வரும் ‘மொகல்லா கிளினிக்’ எனப்படும் நகா்ப்புற நலவாழ்வு மையங்களைப் பாா்வையிட்டேன்.

அதனடிப்படையில் தமிழகத்திலும் நகா்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் தற்போது திறக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் 172 வகை முக்கிய மருந்துகளும், 64 வகை அத்தியாவசிய ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் நவீனமயமாக வேண்டும். புதிய நோய்களை எதிா்கொள்ளும் ஆற்றல் கொண்டவா்களாக நமது மருத்துவா்கள் செயல்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகள் அதிகமாக நடக்க வேண்டும். மருத்துவா்கள் மட்டுமல்லாது மருத்துவ வல்லுநா்களையும் உருவாக்க வேண்டும். வாழ்விடத்துக்கு அருகிலேயே பள்ளிகள் இருப்பதைப் போல, வசிப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவமனைகள் என்ற சூழலை விரைவில் உருவாக்குவோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் எழிலன், மேயா் பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT