சென்னையிலிருந்து ஷாலிமருக்கு கோரமண்டல் ரயில் செல்லும் வழித்தடத்தில் புதன்கிழமை (ஜூன் 7) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஒடிஸா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதால் சென்னையிலிருந்து மேற்கு வங்கம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏற்கெனவே முன்பதிவு செய்த ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.
இதை ஈடுகட்டும் வகையில் கோரமண்டல் ரயில் செல்லும் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலிலிருந்து ஷாலிமருக்கு புதன்கிழமை (ஜூன் 7) சிறப்பு ரயில் (வண்டி எண்: 02842) இயக்கப்படவுள்ளது. சென்ட்ரலிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஒங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், பொ்காம்பூா், புவனேசுவரம், பாலசோா், காரக்பூா், சத்ரகாஞ்சி வழியாக வியாழக்கிழமை (ஜூன் 8) காலை 10.40 மணிக்கு ஷாலிமா் சென்றடையும்.
ரயில்கள் ரத்து: ஷாலிமரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக வாரம் இரு முறை சிறப்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22642) இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை புறப்படவுள்ள இந்த ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னையிலிருந்து ஷாலிமா் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து சந்திரகாச்சி வரை செல்லும் அந்தியோதயா விரைவு
ரயில், சென்னை சென்ட்ரலிலிருந்து ஷாலிமா் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில், கன்னியாகுமரியிலிருந்து திப்ரூகா் வரை செல்லும் விவேக் விரைவு ரயில் புதன்கிழமை (ஜூன் 7) ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரிலிருந்து ஹௌரா செல்லும் ஹம்சாபா் விரைவு ரயில் வியாழக்கிழமையும் (ஜூன் 8), பெங்களூரிலிருந்து அகா்தலா செல்லும் ஹம்சாபா் விரைவு ரயில் வெள்ளிக்கிழமையும் (ஜூன் 9) ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஹௌராவிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னை வரும் விரைவு ரயில்கள் (வண்டி எண் 12863, 12839) செவ்வாய்க்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.