தமிழ்நாடு

ரயில் விபத்து குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: தொல். திருமாவளவன் 

5th Jun 2023 01:18 PM

ADVERTISEMENT

ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திங்கள்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் 275 பேர் மரணமடைந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு ரயில்வே துறை, மத்திய அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என அத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ரயில்வே மண்டல பொதுமேலாளர், அங்குள்ள பிரசனை குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய தணிக்கையாளர் குழு சிஏஜி அளித்த அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தெரிவித்துள்ளார்கள். சிஏஜி அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும். அவை ரயில்வே அமைச்சகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சர் பதவி விலக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி அமைச்சராக இருந்த போது கவாச் என்கிற கவசம் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.952 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 

இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கோர ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, சிறப்பு புலணாய்வு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் ஏப்.8-ம் தேதி கோயிலுக்குள் நுழைந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு யாரும் கைது செய்யப்படவில்லை. அக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. ஆனால் பாமக முன்னணி நிர்வாகிகள் அக்கோயில் தனியாருக்கு சொந்தமானது என கூறுகின்றனர். 

ADVERTISEMENT

இதில் காவல்துறை, இந்து அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் ஆதிதிராவிட மக்கள் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்ற நிலை உள்ளது. 1947-ல் கோயில் நுழைவு சட்டம் இயற்றக்கப்பட்டது. கோயிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. தனி நபர்கள் கோயிலாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. இந்து அறநிலையத்துறை தொடங்கப்பட்ட பின்னர் 1959-ல் அச்சட்டம் உறுதிபடுத்தப்பட்டப்பட்டது. மேல்பாதி கிராம மக்களின் உரிமை கோரி வருகிற ஜூன் 9ம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

அதே போன்று மதுரையைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிய வன்முறை கட்டஅவிழ்த்தவிடப்பட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. எனவே வருகிற ஜூன் 12-ம் தேதி மதுரையில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி நதி நீர் ஆணையத்திடம் எடுத்துரைத்துள்ளோம். அதனை மீறி ஒரு செங்கற்களை கூட எடுத்து வைக்க முடியாது. புதிய நாடாளுமன்றம் பாஜகவின் ஹிந்து ராஷ்டிரிய கணவு திட்டமாகும். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை ஏற்காத சாவக்கரின் பிறந்தநாளன்று நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து சமர்ப்பணம் செய்துள்ளனர். 

888 இருக்கைகள் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்து தொகுதிகள் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த முடியாது. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் தொகுதிகளை உயர்த்தி பாஜக தனிப்பெரும்பான்யை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் ஆதரவின்றி வெற்றி பெற பாஜக தொகுதி வரையறை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 2024ல் பாஜகவை வீழ்த்த மாநிலங்கள் வாரியாக கட்சிகள் ஒரணியில் சேர வேண்டும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறை குற்றவாளிகளை நன்னடத்தை கருதி விடுதலை செய்ய வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பேட்டியின் போது காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன், தொகுதி செயலாளர்கள் பா.தாமரைச்செல்வன், வ.க.செல்லப்பன், மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, கோ.நீதிவளவன், பசுமைவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படவிளக்கம்- சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி. உடன் ம.சிந்தினைசெல்வன் எம்பி
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT