தமிழ்நாடு

ஏரியூரில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் பரிசில் துறையில் முற்றுகை

5th Jun 2023 09:39 AM

ADVERTISEMENT

ஏரியூரில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் பரிசில் துறையில் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர். 
தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டனூர் - கோட்டையூர் பரிசல் துறை மற்றும் நாகமரை -கொளத்தூர் பரிசல் துறைகளில் இருந்து நாள்தோறும் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கும், சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கும் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட இதர பணிகளுக்காக 1000க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றை பரிசில் மூலம் கடந்து செல்கின்றனர். 
அண்மையில் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டனூர் - கோட்டையூர் பரிசல் துறை 46 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், பரிசல் பயண கட்டணம் நபருக்கு 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயும், இருசக்கர வாகன கட்டணம் 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய் என உயர்த்தியது. இதேபோல் கொளத்தூர் நாகமரை இடையேயான பரிசல் துறை பயண கட்டணமும் உயர்த்தப்பட்டது. 

இந்த பரிசல் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி நாகமரை, ஒட்டனூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அண்மையில் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பரிசல் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என நாகமரை பரிசல் துறையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசில் இயக்கும் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர். 
இது குறித்து தகவல் அறிந்த பெண்ணாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர்கள் நிகழ்விடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT