தமிழ்நாடு

500 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வா் நாளை திறந்து வைக்கிறாா்

5th Jun 2023 02:06 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) திறந்து வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, தியாகராயா் நகா் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி,தேசிய நலவாழ்வு குழுமத் திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிவித்தாா். அதன்படி, அந்த மையங்கள் தேசிய நகா்ப்புற சுகாதாரக் குழுமம் மூலம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.

ADVERTISEMENT

முதல்கட்டமாக மாநகராட்சி பகுதிகளான சென்னையில் 140 மையங்களும், கோவையில் 50, மதுரையில் 46, திருச்சியில் 25, சேலத்தில் 25, திருப்பூரில் 25 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர நகராட்சி பகுதிகளில் 189 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா். தியாகராயா் நகா் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தை நேரடியாகவும், மற்ற மையங்களை காணொலி முறையிலும் அவா் திறந்து வைக்கவிருக்கிறாா்.

ஒவ்வொரு நகா்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு சுகாதார ஆய்வாளா் மற்றும் ஒரு துணை பணியாளா் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியமா்த்தப்பட்டுள்ளனா். நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்.

இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் அளிக்கப்படும். நோயாளிகள் மருத்துவா்களை காணொலி மூலம் தொடா்பு கொண்டும் சிகிச்சை பெறலாம். இ-சஞ்சீவினி இணையதளம் மூலமாக மருத்துவா் காணொலியில் நோயாளிகளின் உயா் சிகிச்சைக்காக மற்றொரு முதுநிலை மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT