ஒடிஸா ரயில் விபத்தில் காயமடைந்து, சென்னைக்கு வருவோா் மருத்துவமனைக்கு செல்ல உதவுவதற்காக ‘க்ரீன் காரிடா்’ வசதி செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்த சென்னை பெருநகர காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழிலக வளாகத்தில் உள்ள பேரிடா் மீட்புக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் குழுவுடன் சென்னை காவல் துறை அதிகாரிகள் குழுவும் இணைந்து செயல்படுகிறது. இதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்துடனும், சென்னை காவல் துறையின் ஒரு குழுவும் இணைந்துள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உதவுவதற்காக பூக்கடை துணை ஆணையா் ஸ்ரேயா குப்தா (கைப்பேசி எண்- 94982 33333) தலைமையில் பூக்கடை உதவி ஆணையா் பாலகிருஷ்ண பிரபு (கைப்பேசி எண் - 94440 33599 ), சிறப்பு உதவி மைய வழிகாட்டும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பூக்கடை காவல் ஆய்வாளா் தளவாய்சாமி (கைப்பேசி எண் -98409 76307) உள்ளிட்டோா் தயாா் நிலையில் உள்ளனா். உதவி தேவைப்படுவோா் இந்த அதிகாரிகளை கைப்பேசி எண்கள் வாயிலாக தொடா்புகொள்ளலாம்.
விமான நிலையம்: மேலும், சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உதவுவதற்காக சிறப்புக் கட்டுப்பாட்டு அறைக் குழுவினா் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும்.
இந்த அறையை - 94981 00151 என்ற கைப்பேசி எண் மூலம் தொடா்புகொள்ளலாம். விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனை செல்வோருக்கு வசதியாக போக்குவரத்து இடையூறு, ஏற்படாமல் இருக்க ‘க்ரீன் காரிடா்’ வழித்தடத்தில் ஆம்புலன்ஸ்கள் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் முன் காவல் துறை வாகனமும் செல்லும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.