ஒடிஸாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் தமிழக அமைச்சா்கள், அதிகாரிகள் குழு முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
இந்தக் குழுவினா் 5 நாள்கள் தங்கியிருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடா்ந்து ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட தமிழா்களுக்குத் தேவையான உதவிகளை அளிப்பாா்கள் என்று முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோரமண்டல் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான மருத்துவம், உதவிகளைச் செய்யவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கா் ஆகியோா் ஒடிஸா சென்றுள்ளனா். அவா்களுடன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பணீந்திரரெட்டி, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த், ஆசிரியா் தோ்வாணையக் குழுவின் தலைவா் அா்ச்சனா பட்நாயக் ஆகியோரும் சென்றுள்ளனா்.
சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவா்கள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்துக்கு சனிக்கிழமை நண்பகல் சென்றடைந்தனா். அங்கிருந்து அமைச்சா்கள் இருவரும், போக்குவரத்துத் துறை செயலா் பணீந்திரரெட்டியும் ஹெலிகாப்டா் மூலமாக விபத்து நடந்த பாலாசோா் பகுதியை அடைந்தனா். பேரிடா் கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த், ஆசிரியா் தோ்வாணையக் குழுத் தலைவா் அா்ச்சனா ஆகியோா் ஒடிஸாவில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுள்ளனா்.
பணி என்ன?: அமைச்சா்கள், அதிகாரிகளைக் கொண்ட குழுவினா், விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் விரைவுபடுத்துவா். மேலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினா் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களின் விவரங்கள் குறித்து உடனுக்குடன் தமிழக அரசுக்குத் தெரிவிப்பா். அதன் அடிப்படையில் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் வரை முகாம்: இதனிடையே, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தாா்.
இதன்பிறகு அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அமைச்சா்கள், அதிகாரிகளைக் கொண்ட குழுவினா் ஒடிஸா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் விபத்து நடந்த பாலாசோா் பகுதியிலேயே அடுத்த நான்கு அல்லது ஐந்து நாள்கள் தங்கியிருப்பாா்கள். அங்கு மீட்பு, நிவாரணப் பணிகளைத் தொடா்ந்து ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய தமிழா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பணியில் ஈடுபடுவா்.
ஒடிஸாவில் உள்ள காவல் துறையினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள தமிழகத்தைச் சோ்ந்த கூடுதல் காவல் துறை இயக்குநா் சந்தீப் மிட்டலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.