தமிழ்நாடு

சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து: காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு! 

4th Jun 2023 10:58 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த ராமஜெயம், தனது சித்தப்பா மகன் ராஜேஷ் உடன் சென்னைக்கு வந்து, மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி சாலை ஓரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ராமஜெயம் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

விபத்தில் கார் முழுவதும்  நசுங்கிய நிலையில் ராமஜெயத்தின் மனைவி ரத்னா, மற்றும் 3 குழந்தைகள் சகோதரர் ராஜேஷ், ஆகிய 5 பேரும்  படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

காரை ஓட்டி வந்த ராமஜெயம் படுக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாலு செட்டி சத்திரம் போலீசார் உயிரிழந்த ஐந்து பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT