தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து வேதனை அளிக்கிறது: ஈ.ஆர்.ஈஸ்வரன்

3rd Jun 2023 03:52 PM

ADVERTISEMENT

ஒடிசா ரயில் விபத்து வேதனை அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் விபத்தில் சுமாராக 280 க்கும் மேற்பட்ட விலை மதிப்பில்லாத மனித உயிர்களை நாம் இழந்து இருப்பதாகவும் 900 பேருக்கும் மேல் காயம் அடைந்து இருப்பதாகவும் வரும் செய்திகள் சொல்ல இயலாத துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. மேலும் உயிரிழந்தவர்கள் யார் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் எங்கு உள்ளார்கள் என்று இதுவரை எந்த விவரங்களும் அறிய முடியாத அசாதாரண சூழ்நிலையே உள்ளது. 
பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்திய திருநாடு இது போன்ற ஒரு கோர விபத்தை இதற்கு முன்னர் சந்தித்திருக்குமா என்பது தெரியவில்லை. இந்த விபத்து சம்பவம் நமது இந்திய வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக அமைந்துவிட்டது. ஒரு விபத்து ஏற்பட்ட பின் மீண்டும் அதே இடத்தில் இன்னொரு விபத்து ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்தாக அமைந்துவிட்டதாக செய்தி ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது. 
முன்பதிவு டிக்கெட்டுகள் பெற்று பயணம் செய்தவர்கள் முகவரியை மட்டுமே உடனடியாக கண்டுபிடிக்க முடியும். முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் பெற்று பயணம் செய்தவர்கள் விபரங்களையும் உடனடியாக அறிந்து அவர்களுக்கும் போதிய உதவிகள் வழங்க வேண்டும். இது போன்ற பெரு விபத்துகளை தவிர்ப்பதற்கு போதிய தொழில்நுட்ப சாத்திய கூறுகள் நமது இந்தியாவில் இருந்தும் அதை நாம்மால் அமல்படுத்த முடியாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக உள்ளது. 
ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபங்களையும் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உயிர் இறந்தவர்களுக்கு என்ன நிதி நிவாரணம் கொடுத்தாலும் பாதிப்பை ஈடு செய்ய இயலாது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும் சிகிச்சையில் உள்ளவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவும் இறைவனை வேண்டி கொள்கிறேன். 
நடந்திருக்கின்ற விபத்து ரயில் பயணிகள் அனைவருக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதனால் நடந்தது என்ற விபரத்தையும், எதிர்காலத்தில் இப்படி ஒரு விபத்து நடக்காது என்ற நம்பிக்கையையும் பயணிக்கின்ற அனைவருக்கும் கொடுக்க வேண்டியது அரசினுடைய கடமை. இதன் மூலம் இதற்கு பிறகு ரயிலில் பயணிப்பவர்கள் நிம்மதியாக பயணிப்பதற்கு நம்பிக்கை ஏற்படும். முன்பதிவுகள் இல்லாமல் பயணிப்பவர்களின் விவரம் இல்லாதது கவனிக்க வேண்டியது. 
முன்பதிவு செய்யவில்லை என்றாலும் ரயிலில் உள்ளே ஏறும் போது ஆதார் அட்டையை பதிவு செய்து ஏறினார்கள் என்றால் பயணிப்பவர்களுடைய விபரங்கள் ரயில்வே துறையிடம் இருக்கும். அதற்கான முன்னெடுப்புகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT