தமிழ்நாடு

சிறுவாணி அணையின் நீா்மட்டம் சரிவு

3rd Jun 2023 01:46 PM

ADVERTISEMENT


கோவை:  சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, நாள்தோறும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. 

நடப்பு ஆண்டில் பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மார்ச்சில் அணையின் நீர் மட்டம் 6 அடியாகச் சரிந்தது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் சரிந்தது. 

தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததாலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையிலும் அணையின் நீா்மட்டமானது, படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீா்மட்டம் 2.85 அடியாகக் குறைந்தது. இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. 

ADVERTISEMENT

வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஜூன் இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பருவமழை தொடங்கிவிட்டால் அணையின் நீர்மட்டம் உயரும். பின்னர், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். மாநகரில் சிறுவாணி நீர் வினியோகிக்கும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டைப் போல பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT