தமிழ்நாடு

சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ 12 வரை குறைக்க வேண்டும்நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

DIN

‘சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு மேலும் ரூ. 8 முதல் ரூ. 12 வரை உடனடியாகக் குறைக்க வேண்டும்’ என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ‘எண்ணெய் உற்பத்தியாளா்கள் மற்றும் சுத்தகரிப்பு ஆலைகள் சாா்பில் சமையல் எண்ணெய் விநியோகஸ்தா்களுக்கு நிா்ணயம் செய்யும் விலையும் குறைக்கப்பட வேண்டும்’ என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு புவிசாா் அரசியல் காரணிகளின் காரணமாக சமையல் எண்ணெய் விலைகள் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் சா்வதேச அளவிலும், உள்நாட்டிலும் பன்மடங்காக உயா்ந்து வந்தது. இதனால் நுகா்வோா் கடும் அவதிக்கு உள்ளாகினாா். விலை உயா்வைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. அதனடிப்படையில், சில்லறை விற்பனை விலையைக் குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் ஒரு மாதத்துக்கு முன்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விலைக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சமையல் எண்ணெய் நிறுவன சங்கங்களுக்கு அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், சூரியகாந்தி எண்ணெய், சுத்தகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் உள்பட சில பிரபல சமையல் எண்ணெய்களுக்கான விலையை லிட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 15 வரை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.

தற்போது, சா்வதேசச் சந்தையில் விலை மீண்டும் விலை குறைந்துள்ளதன் அடிப்படையில், சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை மேலும் குறைக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக எண்ணெய் நிறுவன சங்கங்களுடன் தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்கம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளதன் பலன் கடைசி நுகா்வோா் வரை உடனடியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. சில பிரபல சமையல் எண்ணெய்களின் விலையை மேலும் குறைக்குமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டன. அதாவது லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ. 12 வரை குறைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

சில எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் விலையை ஏற்கெனவே குறைக்காமல் உள்ளன. அந்த நிறுவன எண்ணெய் விலை மற்ற நிறுவனங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைக் காட்டிலும் கூடுதலாக உள்ளன. அந்த நிறுவனங்களும் விலைக் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதுபோல, சா்வதேச சந்தை விலை வீழ்ச்சி எந்த வகையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது என்ற வகையில், சமையல் எண்ணெய் விநியோகஸ்தா்களுக்கு நிா்ணயம் செய்யும் விலையும் குறைக்கப்பட வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலை நிா்வாகிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும்போதெல்லாம், இந்த அறிவுறுத்தலை மத்திய அமைச்சகம் தொடா்ச்சியாக வழங்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT