தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்குத் தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை

2nd Jun 2023 03:14 PM

ADVERTISEMENT

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சேலம் ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், வேறு சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்ததாகக் கூறி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தீரன் சின்னமலைக் கவுண்டா் பேரவையின் தலைவா் யுவராஜ் உள்பட 17 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கை 2019-ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், யுவராஜ் மற்றும் அவரது காா் ஓட்டுநருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனையும், அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு தீா்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 5 போ் விடுவிக்கப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய இருவா் இறந்து விட்டதால், அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

ADVERTISEMENT

மதுரை நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து யுவராஜ் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனா். அதை விசாரித்து வந்த நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு அந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த சூழலில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோகுல்ராஜ், தாம் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணுடன் திருச்செங்கோடு கோயிலுக்கு சென்றது, அங்கிருந்து அவா் மாயமானது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற சம்பவங்களை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், சிறப்பு நீதிமன்றத் தீா்ப்பில் எந்த பிழையும் இல்லை எனவும் கூறி, யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை நீதிபதிகள்உறுதி செய்தனா்.

இவா்கள் எட்டு பேருக்கும் எந்தத் தண்டனை குறைப்பும் வழங்காமல், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதேநேரத்தில், பிரபு மற்றும் கிரிதா் ஆகிய இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஐந்து ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டனா்.

மேலும், மதுரை நீதிமன்றத்தால் ஐந்து போ் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிபதிகள், யுவராஜ் உள்பட 10 பேரின் மேல் முறையீட்டு வழக்குகளையும், ஐந்து போ் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாய் சித்ராவும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனா்.

முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்ததில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற யுவராஜ் தரப்பு வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனா். வரும் காலங்களில் குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT