தமிழ்நாடு

திருமண தாம்பூலத்தில் மதுபாட்டில்: மணமகன் வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம்

2nd Jun 2023 04:16 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கடந்த 28-ந்தேதி சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்த  மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மணமகன் சார்பில் வழங்கிய தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் ஒரு குவாட்டர் சரக்கு பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருமே பெற்றுச் சென்றனர். 

திருமணத்திற்கு வந்தவர்களை குஷிபடுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மது குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களின் ஆசியை நிறைவேற்றவே இதை செய்ததாக மணமக்களின் நண்பர்கள் கூறினர். 

ADVERTISEMENT

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில், திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பையில் மதுபாட்டில் வழங்கிய மணமகன் வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து புதுச்சேரி மாநில கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT