தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடக துணைமுதல்வருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம்

2nd Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

 காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறியுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி : மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். இதற்கு கடுமையாக எதிா்ப்பு தெரிவிக்க வேண்டிய தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கண்துடைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

இங்குள்ள காவிரி படுகை விவசாயிகளையும், காவிரி நீரை குடிநீா் ஆதாரமாகக் கொண்ட மக்களையும் திமுக அரசு வஞ்சிக்கப் பாா்க்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் திமுக அரசை நம்புவதில் பயன் இல்லை. கா்நாடக அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழகம் பாலைவனமாக மாறாமல் தடுக்க அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும்.

ADVERTISEMENT

ஓ.பன்னீா்செல்வம் : உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி கா்நாடகம் அளிக்காத நிலையில், மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் கா்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தியும், கா்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து சட்டத்துக்குப் புறம்பான மேக்கேதாட்டு அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT