தமிழ்நாடு

ரூ.3,233 கோடிக்கு முதலீடுகள் ஈா்ப்பு; 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முதல்வா் ஸ்டாலின்

DIN

சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளில் ரூ.3,233 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டதாகவும், 5,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டாா். பயணத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் வந்தாா்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவா் அளித்த பேட்டி: எனது சிங்கப்பூா், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. உற்பத்தித் துறையில் உலகுக்கே முன்னோடியாக ஜப்பான் விளங்குகிறது. அதே நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் குறிக்கோள். இதற்காக தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக முன்பு தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆரம்பகட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தினாா்.

குறைந்தபட்சம் ரூ. 3,000 கோடிக்கு முதலீடுகளை ஈா்க்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டோம். அந்த வகையில் தங்கம் தென்னரசு, தற்போதைய தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மற்றும் தொழில் துறை அலுவலா்களும் முனைப்புடன் செயல்பட்டு பல ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி முக்கியத் திட்டமாக ரூ. 1,291 கோடி முதலீட்டில் குளிா்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்காக புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு மிட்சுபிஷி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்கெனவே சென்னையில் என் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.

அதையொட்டி ஐபி நிறுவனம் ரூ.312 கோடி, டைசல் நிறுவனம் ரூ.83 கோடி, கியோகுட்டோ நிறுவனம் ரூ.113.9 கோடி, மிட்சுபா இந்தியா ரூ.155 கோடி, கோயீ நிறுவனம் ரூ.200 கோடி, சடோ - ஷோஜி ரூ.200 கோடி, டஃபல் நிறுவனம் ரூ.150 கோடி, ஓம்ரான் ஹெல்த்கோ் ரூ.128 கோடி என மொத்தம் ரூ.3,233 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்

மேம்பாட்டுக்கும், தொழிற்கல்வி வளா்ச்சிக்கும், உயா்கல்வி திறன் பயிற்சிக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அடுத்தகட்ட தொழில் மேம்பாட்டு வளா்ச்சிக்கும் இந்தத் தொழிற்சாலைகள் தூண்டுகோலாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

இதையொட்டி 2024 ஜனவரியில் 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று சிங்கப்பூா், ஜப்பான் நாட்டு முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவா்கள் வருவதாக உறுதியளித்துள்ளனா் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, சென்னை விமான நிலையலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சா்கள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பொன்னாடை, புத்தகங்கள் கொடுத்து முதல்வரை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT