தமிழ்நாடு

மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஏரியில் இறங்கி போராட்டம்!

1st Jun 2023 02:11 PM

ADVERTISEMENT

 

சேலம்: மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள், மணல் கடத்தலில் ஈடுபட்ட கவுன்சிலர் மற்றும் கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

சேலம் மல்லூர் அடுத்த வேங்கம்பட்டி அருகே உள்ளது ஓட்டேரி. 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு பனமரத்துப்பட்டி ஏரி, பெரிய ஏரி, பெத்தாம்பட்டி ஏரி ஆகிய பகுதிகளில் இருந்து நீர் வரும். இந்த நீர் வளத்தை வைத்து இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ஏரியில் நீர் வற்றியுள்ளதால் அந்த பகுதி முழுவதும் மணல் நிறைந்த பகுதிகளாக உள்ளது. இதனை மல்லூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலராக உள்ள கோமதி பழனிவேல் மற்றும் அவரது ஆள்கள் சட்டவிரோதமாக மணல் மற்றும் நொரம்பு மண்ணை எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | கோவையில் பரபரப்பு... காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், பெற்றோர் கைது!

இது குறித்து கிராம மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் மணல் கடத்தலை நிறுத்தாமல் நாள்தோறும் இரவு நேரங்களில் மணலை அள்ளி இதுவரை 400 லோடுகளுக்கு மேல் மண்ணை அள்ளப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துறையில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று வியாழக்கிழமை அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மணல் அள்ளிய ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும், ஏரியை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மல்லூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் கோமதி பழனிவேல் கோயில் திருவிழாவிற்காக மணல் அள்ளுவதாகக் கூறி கோடிக்கணக்கில் மணலை விற்பனை செய்து வருகின்றார். உடனடியாக அரசு இந்த மணல் கடத்தலை தடுத்து நிறுத்திட வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபட்ட கவுன்சிலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT