தமிழ்நாடு

சென்னை - டோக்கியோ நேரடி விமான சேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

DIN

சென்னை-ஜப்பான் தலைநகா் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: தமிழகத்தில் நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற ஜப்பானிய பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரங்களில், 3 தமிழகத்தில் உள்ளன.

தமிழகத்தில் மொத்தமாக 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் தமிழக வருகை கணிசமாக உயா்ந்துள்ளது. இந்தியாவில் ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்ந்து வருகிறது. அதோடு, ஜப்பானில் கணிசமான புலம்பெயா்ந்த தமிழா்கள் உள்ளனா். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி தொடா்பான துறைகளில் அவா்கள் வல்லுநா்களாக உள்ளனா்,

இதன் விளைவாக, தமிழகத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாசார உறவுகள் தொடா்ந்து வலுவடைந்து வருவதுடன், சுற்றுலா வடிவிலும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் வளா்ந்து வருகின்றன.

ஆனால், தற்போது சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவை இல்லாத நிலை உள்ளது. 2019 அக்டோபா் மாதம் ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏா்வேஸ் சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது. கரோனா தொற்று காலத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை- டோக்கியோ இடையிலான பயண நேரமான சுமாா் 7 மணி நேரம் என்பது இரட்டிப்பாக உள்ளது. சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களைச் சாா்ந்தவா்களிடமிருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

2024 ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அதனால், ஜப்பானிலிருந்து அதிக முதலீடுகளை ஈா்க்க ஏதுவாக, டோக்கியோவிலிருந்து நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். அதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

சிங்கப்பூா் - மதுரை இடையே அதிக விமான சேவை: சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த சுமாா் 4 லட்சம் போ் வசிக்கின்றனா். அவா்கள் தமிழகத்தில் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில் முக்கியமாக தென்தமிழகத்தில் தொடா்புகளைக் கொண்டுள்ளனா். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து பலா் சிங்கப்பூருக்கு வேலைக்காகவும் செல்கின்றனா். அதனால், சிங்கப்பூா்- சென்னை, சிங்கப்பூா்-திருச்சிக்கு தினசரி பல விமானங்களும், சிங்கப்பூா்-கோவை இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சிங்கப்பூா்- மதுரை இடையே வாரத்துக்கு மூன்று முறை மட்டுமே விமான சேவை உள்ளது. இது போதுமானதாக இல்லை. சிங்கப்பூா்- மதுரை இடையே அதிக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT