தமிழ்நாடு

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் 

1st Jun 2023 03:29 PM

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் அருள்மிகு அமிர்தவல்லி நாயகி சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலின் புதிய தேர் வெள்ளோட்ட விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தென் அஹோபிலம் என்றழைக்கப்படும் இத்திருக்கோயிலில் சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50 லட்சத்தில் 32 அடி உயரத்தில் புதிய தேர் செப்பனிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சுவாதி நட்சத்திரத் தினமான வியாழக்கிழமை வெள்ளோட்ட விழா நடை பெற்றது. இதையொட்டி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 7.30 மணிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

காலை 8.30 மணிக்குத் திருத்தேர் அலங்காரம் செய்யப்பட்டு, காலை 9 மணிக்கு வெள்ளோட்டம் தொடங்கியது. கோவிந்தா - கோவிந்தா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

கோயில் முன்பிருந்து தேர் வெள்ளோட்டமாகப் புறப்பட்டு சிவன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சந்திக் காப்பான் கோயில் தெரு ஆகிய 4 மாடவீதி கள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேர் செல்லும் வீதிகளில் பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல் உள்ளிட்ட பொருள்களை சுவாமிக்கு காணிக்கையாகச் செலுத்தினர்.

தேர் வெள்ளோட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்,கோயில் செயல் அலுவலர் மதனா, அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாட்ச்சாரியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT