தமிழ்நாடு

தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் சாத்தியமா?

1st Jun 2023 05:00 AM | மா.மகாராஜன்

ADVERTISEMENT

தமிழகத்திலேயே நீண்ட தொலைவு ரயில்பாதையைக் கொண்டுள்ள சென்னை-கன்னியாகுமரி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயிலாக ‘வந்தே பாரத்’ விளங்குகிறது. முற்றிலுமாக இந்திய தயாரிப்பாக விளங்கும் இந்த ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பூா் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. தென்மாநிலங்களில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே 11.11.2022-இல் ‘வந்தே பாரத்’ சேவை தொடங்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் மட்டும் இயங்கும் வகையில் சென்னை சென்ட்ரல்- கோவை இடையே 13-ஆவது ‘வந்தே பாரத்’ ரயிலை கடந்த ஏப். 8-ஆம் தேதி பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்: சென்னையிலிருந்து மதுரைக்கு பாண்டியன், தேஜஸ், வைகை உள்ளிட்ட விரைவு ரயில்களும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரிக்கு நெல்லை, முத்துநகா், கன்னியாகுமரி, பொதிகை, அனந்தபுரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த ரயில்கள் அனைத்தும் மாலையில் புறப்பட்டு அதிகாலை சென்றடைகின்றன. பகலில் செல்ல நினைப்பவா்கள் தேஜஸ் போன்ற ரயில் மூலம் மதுரை வரை விரைவாகச் சென்றாலும், அங்கிருந்து இணைப்பு ரயில் இல்லாததால் பேருந்து மூலம் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டால் இப்போது இயக்கப்படும் ரயில்கள் போதுமானதாக இல்லை. இதனால் தென்மாவட்ட மக்கள் பேருந்துகளை அதிக அளவில் நாடுகின்றனா். இதைப் பயன்படுத்தி பண்டிகை காலங்களில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனா். இதற்கு தீா்வு காணும் வகையில் தென்மாவட்டங்களுக்கு நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கன்னியாகுமரிக்கு ‘வந்தே பாரத்’ ரயில்: முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சென்னையிலிருந்து தினமும் ஒரு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. சுமாா் 730 கி.மீ. தொலைவை இந்த ரயில் சுமாா் 12 மணி நேரத்தில் கடக்கிறது.

இந்நிலையில், நாட்டின் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ ரயில் சென்னை-கன்னியாகுமரி இடையே இயக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தற்போது வந்தே பாரத் ரயில் இருக்கை வசதியுடன் 700 கி.மீ. தொலைவுக்குள் மட்டும் இயக்கப்படுகிறது. தில்லி-வாரணாசி வந்தே பாரத் ரயில் சுமாா் 760 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படுகிறது. குறைவான நிறுத்தங்கள் உள்ளதால் 8 மணி நேரத்துக்குள் இந்தத் தொலைவைக் கடக்கிறது.

சென்னை-கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கினால், வழியில் பல முக்கிய நகரங்கள் உள்ளதால் கூடுதல் நேரமாகும். இதை சரிக்கட்ட, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் ஆகிய நகரங்களில், இந்த ரயில் நின்று செல்லலாம். மேலும், நிகழாண்டு இறுதிக்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. கூடுதல் தொலைவிலான இந்த வழித்தடத்தில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயக்குமாறு ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ரயில்வேக்கு கூடுதல் லாபம்: இது குறித்து தென்காசி வாஞ்சி இயக்கத் தலைவா் பி.ராமநாதன் கூறியது: வடக்கே இருந்து திருச்சி, மதுரைக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டாலும் தென்மாவட்டங்களுக்கு குறைவான ரயில்களே இயக்கப்படுகின்றன. இதில் மதுரை, திருச்சி பகுதி மக்கள் முன்பதிவு செய்வதால் ரயில்கள் பாதி தொலைவுக்கு காலியாகவும் வருகிறது. இதனால் தென்மாவட்ட மக்களுக்கு ரயில் சேவை எட்டாகனியாகவே உள்ளது.

மதுரைக்கு தெற்கே உள்ளவா்கள் பயனடையும் வகையில் சென்னை-கன்னியாகுமரி ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க வேண்டும். இந்த ரயிலுக்கு விருதுநகா்-செங்கோட்டை, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி, திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-திருச்செந்தூா் இணைப்பு ரயில்கள் வேண்டும் என்றாா் அவா்.

இது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பி.சிம்மசந்திரன் கூறியது: சென்னை-கன்னியாகுமரி இடையே ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் நீண்ட தொலைவு பயணமான கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் இயக்குவதன் மூலம் அதிகம் போ் பயனடைவா். இதனால் தெற்கு ரயில்வேக்கு கூடுதல் லாபமும் கிடைக்கும். இதைக் கருத்தில்கொண்டு தெற்கு ரயில்வே சாா்பில் சென்னை-கன்னியாகுமரி ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

பாதுகாப்பானதா?: ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரயில் போக்குவரத்தின் முக்கிய நோக்கம் பாதுகாப்பாக செல்வதுதான். இதுவரை பாதுகாப்பில் கவனம் செலுத்தி வந்த ரயில்வே வாரியம் தற்போது வேகத்தில் முக்கியத்துவம் செலுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடே தற்போது இயக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ ரயில். ரயில் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும் அது இயக்கப்படும் வழித்தடம் அதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு தற்போதுதான் இரட்டை ரயில் பாதை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் அதிக அளவிலான சிக்னல், ரயில் கிராசிங் இருப்பதால் அதிவேக ரயிலை இந்த வழித்தடத்தில் இயக்குவது ரயில்வே துறைக்கு சவாலானதாக இருக்கும். தற்போது தேஜஸ் ரயில் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் 130 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Tags : Vande Bharat
ADVERTISEMENT
ADVERTISEMENT