தமிழ்நாடு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்த ஆண்டு 1.1 கோடி மரக்கன்றுகள் நடவு!

1st Jun 2023 01:17 PM

ADVERTISEMENT


கோவை: ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு 1.1 கோடி மரக்கன்று நடவு செய்ய உள்ளது காவேரி கூக்குரல் இயக்கம்.

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 1.1 கோடி மரக்கன்றுகளை நடுவது இலக்கு. அதில் தற்போது நடவுக்காலம் தொடங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட உள்ளன.

இதன்மூலம், சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடவுள்ளனர்.

ADVERTISEMENT

இதுதவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க | கோவையில் பரபரப்பு... காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், பெற்றோர் கைது!

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை சந்தித்து மரக்கன்றுகள் நடுவதன் பயன்கள் குறித்தும், நிலங்களின் மண் மற்றும் தண்ணீரின் தன்மையை ஆய்வுசெய்து, மண்ணுக்கேற்ற மரங்களை நட பரிந்துரைக்கின்றனர்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாள்களில் லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT