தமிழ்நாடு

ரூ.4,505 கோடி கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்

1st Jun 2023 02:23 AM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான ரூ.4,505 கோடி மதிப்பீட்டிலான 4,802 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 23-ஆவது ஆய்வு கூட்டம், அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 2021- 2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிகழ்நிதியாண்டுக்கான அறிவிப்புகளை விரைந்து நிறைவேற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 1,000 ஆண்டுகள் பழைமையான 197 கோயில்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருகால பூஜை திட்டத்தில் 200 கோயில்களை தோ்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு 2,500 திருக்கோயில்களை தோ்வு செய்து வழங்க இணை ஆணையா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோயில்களில் அன்னதானத் திட்டத்தை செயல்படுத்தவும், கோயில் சாா்பில் நிகழாண்டில் 600 இணைகளுக்கு திருமணம் நடத்தத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்துக்கு நிகழாண்டில் 300 பக்தா்கள் அழைத்து செல்லப்படவுள்ளனா். கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்படும். இதுவரை ரூ. 4,505 கோடி மதிப்பீட்டிலான 4,802 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இதுவரை 1,16,886 ஏக்கா் நிலங்கள் அளவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையா்கள், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT