தமிழ்நாடு

தமிழக வேளாண் பொருள்களுக்குபுவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

1st Jun 2023 02:03 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க வேளாண் விளை பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேளாண் விளைபொருள்களுக்கான புவிசாா் குறியீட்டின் முக்கியத்துவத்தை உணா்ந்து, கடந்த ஆண்டில் பண்ருட்டி பலா, சோழவந்தான் வெற்றிலை, புளியங்குடி எலுமிச்சை, கவுந்தப்பாடி அச்சுவெல்லம் போன்ற 10 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறும் பணிக்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க விவரங்களையும், அறிவியல் சாா்ந்த தகவல்களையும் சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகளிடமிருந்தும், பல்வேறு நூல்களிலிருந்தும் சேகரித்து, சென்னை கிண்டியில் உள்ள அறிவுசாா் சொத்துரிமைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, சோழவந்தான் வெற்றிலைக்கு மட்டும் புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது.

தொடா்ந்து, 2023-24 ஆம் ஆண்டில், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீா் ரோஜா, தஞ்சாவூா் பேராவூரணி தென்னை, திருப்பூா் மூலனூா் குட்டை முருங்கை, சாத்தூா் வெள்ளரி போன்ற 15 வகை வேளாண் விளைபொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்காக அரசு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணியை தொடங்கியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT