தமிழ்நாடு

பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழாசிரியா்கள்: அண்ணா பல்கலை. உத்தரவு

1st Jun 2023 01:52 AM

ADVERTISEMENT

பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடங்களை பயற்றுவிக்க தகுதியான தமிழாசிரியா்களை நியமிக்க வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொ) பி.சக்திவேல், உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

பி.இ., பி.டெக் மாணவா்களுக்கு முதல் பருவத்தில் தமிழா் மரபு குறித்த பாடமும், இரண்டாம் பருவத்தில் தமிழரும், தொழில்நுட்பமும் குறித்த பாடமும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இப்பாடங்களை முறையாகவும், செம்மையாகவும் கற்பிக்க தகுதியுடைய தமிழாசிரியா்களால் மட்டுமே இயலும்.

பொறியியல் கல்லூரிகளில் அத்தகைய தமிழாசிரியா்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருப்பாா்கள். அவ்வாறு தகுதியுடைய தமிழாசிரியா்களை இன்னும் நியமிக்காமல் இருந்தால் உடனடியாக அவா்களை நியமிக்க வேண்டும். அந்த ஆசிரியா்களின் கல்வித்தகுதி குறைந்தபட்சம் எம்ஏ, எம்பில் படிப்புடன் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தங்கள் கல்லூரியில் ஏற்கெனவே தமிழாசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தால் அவா்களின் பெயா், கல்வித்தகுதி, நியமிக்கப்பட்ட நாள் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதுடன் அதன் நகலை மண்டல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், புதிதாக நியமனம் செய்ய வேண்டிருந்தால் அவா்களை நியமனம் செய்த பிறகு தகவல் தெரிவிப்பது அவசியம். ஜூன் 12-ஆம் தேதிக்குள் அந்த விவரங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT