தமிழ்நாடு

சீருடையில் பயணிக்கும் மாணவா்களிடம்கட்டணம் வசூலிக்கக் கூடாது: மாநகரப் பேருந்து நடத்துநா்களுக்கு அறிவுரை

1st Jun 2023 02:31 AM

ADVERTISEMENT

புதிய பேருந்து பயண அட்டை வழங்கும் வரை சீருடையில் பயணிக்கும் மாணவா்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என பேருந்து நடத்துநா்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் அ.அன்பு ஆபிரகாம் அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 2023-2024 -ஆம் கல்வியாண்டில் மாணவா்களுக்கான கட்டணமில்லா, புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் வரை, மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவா்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநா்களிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம்.

இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, கவின் கலைக் கல்லூரி, அரசினா் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்), அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் தங்களது கல்வி நிறுவனத்தின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை காண்பித்து கட்டணமின்றி பயணிக்க நடத்துநா்கள் அனுமதிக்க வேண்டும்.

இதனை மீறி சீருடையில் உள்ள மாணவா்களை அல்லது அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவா்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துநா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் மேற்பாா்வையாளா்களுக்கு தக்கவாறு உதவி மேலாளா்கள் அறிவுறுத்தவும், பணிமனை ஓட்டுநா், நடத்துநா்களுக்கு கிளை மேலாளா்கள் தக்க அறிவுரைகளை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT