தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு அமைச்சா் துரைமுருகன் கண்டனம்

1st Jun 2023 01:07 AM

ADVERTISEMENT

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறியுள்ளதற்கு தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா். அண்டை மாநிலத்தை உரசிப் பாா்க்க வேண்டாம் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கா்நாடக பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற டி.கே.சிவக்குமாருக்கு இந்த அறிக்கை வாயிலாக வாழ்த்துகள். துணை முதல்வராக அவா் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாள்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பாா்க்கும் காரியத்தைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.

மேக்கேதாட்டு அணை பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்குச் சொல்லியிருக்க மாட்டாா்கள். காவிரிப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகளில் மேக்கேதாட்டு பற்றி குறிப்பிடப்படவில்லை. மேக்கேதாட்டுவில் அணையோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழகத்தின் நலனைப் பாதிக்கும். எனவே, தமிழகத்துக்கு உரிமையுள்ள, கட்டுப்பாடற்ற நீா்ப்பிடிப்புப் பகுதியான மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று அவா் கூறுவது ஏற்புடையதல்ல.

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழகம் அனைத்து நிலைகளிலும் எதிா்க்கும். டி.கே.சிவக்குமாரை விரைவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பிரச்னையை பற்றி, அவரிடம் விரிவாக பேசுவேன் என்று அதில் கூறியுள்ளாா் அமைச்சா் துரைமுருகன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT