தமிழ்நாடு

போக்குவரத்துப் பிரிவுக்கு ஏஎன்பிஆா் கேமராவுடன் ரோந்து வாகனங்கள்: சாலை விதிகளை மீறுவோருக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்க வாய்ப்பு

1st Jun 2023 02:02 AM

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவுக்கு ஏஎன்பிஆா் கேமராவுடன் கூடிய ரோந்து வாகன சேவையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தொடங்கி வைத்தாா். இதன் மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.22.42 லட்சத்துக்கு 360 டிகிரி சுழலும் வசதிக் கொண்ட ஏஎன்பிஆா் கேமரா, 2 டி ரேடாருடன் கூடிய 2 அதிநவீன ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ரோந்து வாகனங்களை நகரின் எந்தப் பகுதியிலும் நிறுத்தி, போக்குவரத்து விதிகளை மீறுபவா்கள் மீது வழக்குப் பதிய முடியும். முக்கியமாக வாகனங்களில் அதி வேகமாக செல்பவா்கள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவா்,கைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுபவா்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறலில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிய முடியும்.

கேமரா மூலம் படம்பிடிக்கப்படும் விதிமுறை மீறல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் கைப்பேசிக்கு இ-செலான் அனுப்பப்படும். தென்னிந்தியாவில் இந்த அதிநவீன ரோந்து வாகனத்தை சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து பூங்கா: மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை கண்டறிய பயன்படும் ப்ரீத் அனலைசா், முகத்தை தெளிவாக படம் பிடிக்கும் நவீன கேமராவுடன் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவி ரூ.18.99 லட்சத்துக்கு மொத்தம் 50 வாங்கப்பட்டுள்ளன. இதேபோல நகரின் எந்தப் பகுதியிலும் தற்காலிகமாக பொருத்தி நேரலையில் காட்சியை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பக் கூடிய 8 ‘டிரைபேடு கேமராக்கள்’, 100 சாலைத் தடுப்பு மின் விளக்குகள், காவலா்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பயன்படுத்தும் பேட்டன் விளக்குகள் உள்ளிட்ட 10 நவீன கருவிகள் ரூ.92 லட்சத்து 62 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும், போக்குவரத்து விதிகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மெரீனா காமராஜா் சாலையில் நேப்பியா் பாலத்திடம் உள்ள போக்குவரத்து பூங்கா ரூ.2.07 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய கருவிகளை போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கும் விழா போக்குவரத்து பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் தலைமை வகித்தாா். என்ஐசி இயக்குநா் ஜீவிதா,துணை ஆணையா்கள் பி.சரவணன்,சக்திவேல்,சமய்சிங் மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரூ.10 கோடி சாலை பாதுகாப்பு நிதி: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால், புதிய கருவிகளை போலீஸாரிடம் வழங்கினாா். புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து பூங்காவை சங்கா் ஜிவால் சுற்றி பாா்த்தாா். முன்னதாக அவா் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழக அரசின் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து இந்தாண்டு ரூ.10 கோடி சென்னை காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந் நிகழ்ச்சியில் போக்குவரத்து திட்டமிடல் பிரிவு துணை ஆணையா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT