தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறார்களுக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவு

17th Jul 2023 05:41 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில், 4 சிறார்களுக்கு மரபணு சோதனை நடத்த மாவட்ட எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் சம்பவத்தில் 4 சிறார்களுக்கு மரபணு பரிசோதனை செய்ய சிபி-சிஐடி போலீஸார் அனுமதி கோரிய நிலையில், அவர்களுக்கு உரிய சிறார் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மரபணு சோதனைக்கான ரத்த மாதிரிகளை சேகரிக்க மாவட்ட எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை மாலை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் குடியிருப்பின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் சிபி-சிஐடி போலீஸார், தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட 119 பேரின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?

ADVERTISEMENT

இதன்படி ஏற்கெனவே 21 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 4 சிறார்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சிபி-சிஐடி போலீஸார், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரி கடந்த வாரம் மனு செய்திருந்தனர்.

இதுகுறித்த விசாரணை இரு நாட்கள் நடைபெற்ற நிலையில், மீண்டும் மனு மீதான விசாரணை திங்கள்கிழமை மாலை வந்தது. அப்போது, 4 சிறார்களுக்கும் மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை சேகரிக்க நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.

மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் குழந்தை நேய காவலர் ஆகியோர் தொடர்புடைய சிறார்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேசி, ரத்த மாதிரி சேகரிப்பதற்கான வசதியான தேதியை முடிவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT