திருச்சியில் வழக்கை சாதகமாக முடிக்க ரூ. 3000 லஞ்சம் பெற்ற, விபசார தடுப்பு பிரிவு பெண் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்ற பெயரில் மசாஜ் சென்டர் (ஸ்பா) நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குத்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தரவும் மேலும் குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருக்கவும், ரூ.10,000 லஞ்சமாக தர வேண்டும் என விபச்சார தடுப்பு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமா கேட்டுள்ளார்.
ஆனால், தான் ஏற்கனவே தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தன்னால் தற்போது தொழில் நடத்த முடியாத நிலையில் இருப்பதால், பத்தாயிரம் தர முடியாது என கூறியுள்ளார். இதனையடுத்து முன்பணமாக ரூ.3000 கொடுத்தால்தான் வழக்கை சாதகமாக முடிக்க முடியும் என ரமா கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல், திருச்சி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினரின் ஆலோசனையின் பேரில். அஜிதா, ரமாவிடம் திங்கள் கிழமை காலை, காவல் நிலையத்தில் வைத்து லஞ்சப்பணம் ரூ.3000ஐ கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரமாவை கைது செய்தனர். ரமா விபச்சார தடுப்பு பிரிவில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகரில் சுமார் 60 மசாஜ் (ஸ்பா சென்டர்கள்) இயங்கி வருகிறது. இதில் ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் ரூ.10,000 முதல் 20,000 வரை ரமாவின் வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் பெற்று வருகிறார் என்பதும், இத்தொகையை ரமா லஞ்சமாகப் பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் ரமா, யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.