தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்

17th Jul 2023 05:48 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திங்கள்கிழமை மாலை காவேரி மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம், செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 4 அடைப்புகள் இருந்ததை அடுத்து, கடந்த ஜுன் 21 ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த செந்தில்பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

தற்போது உடல்நலம் தேறியதை அடுத்து செந்தில்பாலாஜி, காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஜூலை 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மேல் அவர் புழல் சிறையில் இருப்பார் என தெரிகிறது. 

புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் புழல் சிறையின் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இருக்க முடியும் என நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT