தமிழ்நாடு

பொன்முடி வீட்டில் பீரோ, லாக்கர்களை உடைக்கிறது அமலாக்கத்துறை

17th Jul 2023 01:40 PM

ADVERTISEMENT


விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் உள்ள பீரோ மற்றும் லாக்கர்களை உடைத்து, சோதனையிடும் நடவடிக்கையில் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.

சென்னை மற்றும் விழுப்புரத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. கணினிகளிலிருந்து கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.

இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?

ADVERTISEMENT

இதற்கிடையே, விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டில் இருக்கும் பீரோ மற்றும் லாக்கர்களுக்கு சாவி இல்லை என அமைச்சரின் உதவியாளர் கூறியதால் பூட்டு திறக்கும் நபரை அழைத்து வர அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பூட்டு திறக்கும் நபரின் உதவியோடு பீரோ மற்றும் லாக்கர்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் உள்ள பீரோ லாக்கர்களை உடைத்து, லாக்கர்களை திறந்து சோதனையிட அமலாக்கத் துறை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குத் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி திடீர் சோதனை செய்தது. இந்நிலையில் சென்னை,விழுப்புரத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 இடங்களில் மத்திய அமலாகத்துறையினர் திங்கள்கிழமை காலை திடீரென சோதனை செய்தனர்.

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள  பொன்முடியின் வீட்டுக்கு காலை 7 மணிக்கு சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் அங்கு வந்திருந்தனர்.

சோதனைக்கான காரணத்தை கூறி, அதற்கான உத்தரவை காட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள், உடனே அங்கு தங்களது வேலையை தொடங்கினர். இச் தனை குறித்து தகவலறிந்த திமுகவினர் அங்கு திரண்டு வரத் தொடங்கினர். இதனால் அங்கு பாதுகாப்பு கருதி, போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதேபோல விழுப்புரம் திருப்பான் ஆழ்வார் தெருவில் உள்ள வீடு,விக்கிரவாண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி உள்பட 9 இடங்களில் அமலாக்க்ததுறையினர் சோதனையை நடத்தினர். விழுப்புரம் வீட்டின் சாவி இல்லாததினால், அங்கு சோதனையை தொடங்குவதில் சுமார் அரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

சோதனையின்போது சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் பொன்முடியும், அவர் மகன் பொன். கெளதம சிகாமணி எம்.பி.யும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடம் அமலாக்கத்துறையினர் வழக்குத் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

இந்த சோதனை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சோதனைக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலையும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT