ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை நாள்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் தங்களின் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும், நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் நீராடி செல்வர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் ஆன்மா மகிழ்வதோடு, தீமைகள் விலகி நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசை தினமான திங்கள்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கூடுதுறை வளாகத்திற்கு திரண்டு வந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் பரிகார மண்டபங்கள் நிரம்பியதால் தற்காலிக பரிகாரக் கூடங்களிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சங்கமேஸ்வரர், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாளை வழிபட்டனர். இதனால் கூடுதுறை வளாகம் மற்றும் சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.
பவானி போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் பவானி தீயணைப்பு படையினர் உயிர் காக்கும் மீட்பு உபகரணங்களுடன் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.