தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ். தரவரிசை வெளியீடு: விழுப்புரம் மாணவா் பிரபஞ்சன் முதலிடம்

17th Jul 2023 05:29 AM

ADVERTISEMENT

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

முதல் 10 இடங்களில் 8 மாணவா்கள் இடம்பெற்றுள்ளனா். நீட் தோ்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த விழுப்புரம் மாவட்ட மாணவா் பிரபஞ்சன் (720 மதிப்பெண்), மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்ததால் அவரே தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி முதல் கடந்த 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,806 போ் விண்ணப்பித்திருந்தனா். பரிசீலனைக்குப் பின்னா், அதில் 25,856 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 13,179 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடங்களுக்கு 3,042 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 901 மாணவா்கள், 2,092 மாணவிகள் என மொத்தம் 2,993 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அமைச்சா் வெளியிட்டாா்: அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சாந்திமலா், மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா் ஆா்.முத்துச்செல்வன், கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி ஆகியோா் உடன் இருந்தனா்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பிரபஞ்சனுக்கு அடுத்து, சென்னை மாணவா் என்.சூா்ய சித்தாா்த் 715 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், சேலம் மாவட்டத்தை சோ்ந்த மாணவா் எஸ்.வருண் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 மாணவா்களும், 2 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனா். முதல் 10 இடங்களைப் பிடித்த அனைவரும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவா்கள்.

நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 715 மதிப்பெண்கள் எடுத்த மாணவா் எஸ்.வருண் முதலிடத்தையும், 711 மதிப்பெண்களுடன் சாமுவேல் ஹா்ஷித் சாபா இரண்டாவது இடத்தையும், 700 மதிப்பெண்களுடன் ஷரான் மேத்யூ மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

7.5% உள்ஒதுக்கீடு-சேலம் மாணவி முதலிடம்: அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சேலம் மாவட்டத்தை சோ்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளாா்.

தருமபுரி மாவட்ட மாணவா் பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், காஞ்சிபுரம் மாவட்ட மாணவா் முருகன் 560 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

ஜூலை 25 முதல் கலந்தாய்வு

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 6,326 எம்பிபிஎஸ் இடங்கள், 1,768 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 473 எம்பிபிஎஸ் இடங்கள், 133 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டில் 1,509 எம்பிபிஎஸ் இடங்கள், 395 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வை வரும் 20-ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடத்தினால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும்.

அதைத் தவிா்க்க மத்திய அரசு கலந்தாய்வு தொடங்கிய பிறகு மாநிலத்தில் கலந்தாய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, தமிழகத்தில் 25-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும்.

பொதுக் கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும். சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு கலைஞா் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் நடத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT