தமிழ்நாடு

எம்பிபிஎஸ் கட்-ஆஃப்: 40 மதிப்பெண் வரை உயர வாய்ப்பு

17th Jul 2023 05:28 AM

ADVERTISEMENT

நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள், இடஒதுக்கீடு அடிப்படையில் 25-லிருந்து 40 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக மருத்துவப் படிப்புகளுக்கு கடுமையான போட்டி நிலவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நீட் தோ்வில் 27,064 போ் 300-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தனா்.

நிகழாண்டில் அந்த எண்ணிக்கை 37,672-ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் வரம்பில் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் நிகழாண்டில் கூடுதலாக போட்டியிடுகின்றனா்.

இதனால், நிகழாண்டில் பொதுப் பிரிவுக்கு தோராயமாக 600 - 602 என கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த முறை அது 580 என்ற அளவில்தான் இருந்தது.

ADVERTISEMENT

அதேபோன்று இந்த முறை பிற்படுத்தப்பட்டோா் பிரிவுக்கு 554-557 எனவும், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) பிரிவுக்கு 530-534 எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 528 - 531 எனவும், எஸ்.சி. மாணவா்களுக்கு 420-429 எனவும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் உயர வாய்ப்புள்ளது.

நீட் தோ்வைப் பொருத்தவரை நிகழாண்டில் தேசிய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு தமிழக மாணவா்கள் இடம்பெற்றுள்ளனா். அதேபோன்று முதல் 50 இடங்களில் 6 மாணவா்கள் உள்ளனா்.

அவா்கள் அனைவரும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்திருந்தால், அவா்கள் விரும்பிய இடங்கள் தமிழகம் உள்பட நாட்டின் எந்தக் கல்லூரியிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதற்கு அந்த மாணவா்கள் முன்வரும்பட்சத்தில் அந்த ஆறு இடங்களும், அதற்கடுத்த நிலையில் உள்ள தமிழக மாணவா்களுக்கு மாநில ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும்.

பெட்டிச் செய்திகள்...

மாணவா்களின் மதிப்பெண் விவரங்கள்

மதிப்பெண் - 2022 - 2023

700-க்கும் மேல் - 5 - 29

650-க்கும் மேல் - 199 - 379

600-க்கும் மேல் - 953 - 1,538

500-க்கும் மேல் - 4,470 - 6,449

400-க்கும் மேல் - 8,763 - 12,037

300-க்கும் மேல் - 12,674 - 17,240

அரசு கல்லூரிகள் கட்-ஆஃப் விவரம் (தோராயமாக)

பிரிவு - 2022 - 2023

பொதுப் பிரிவு - 580 - 602

பிசி- 530 - 557

பிசி (எம்) - 505 - 534

எம்பிசி - 495 - 531

எஸ்சி - 400 - 429

எஸ்டி - 310 - 338

ADVERTISEMENT
ADVERTISEMENT