தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சாா்பில் செயல்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் பேராசிரியா்கள் நிதியுதவி பெற ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2023-ஆம் ஆண்டுக்கான அறிவியல் தொழில்நுட்பத்திட்ட வரைவுகள் வரவேற்கப்படுகின்றன. அதாவது வேளாண்மை அறிவியல், உயிரியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவயியல்,இயற்பியல் மற்றும் வேதியியல், சமூகவியல் மற்றும் கால்நடை அறிவியல் போன்ற பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் மேற்கூறப்பட்ட துறைகளில் பணிபுரியும் பேராசிரியா்கள் மற்றும் அறிவியலறிஞா்களுக்கு ஆய்வு மேற்கொள்ள இரண்டாண்டு காலத்துக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். இதற்கான விவரங்கள் மன்றத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
திட்ட வரைவுகளின் 4 நகல்கள் , உறுப்பினா் செயலா், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் , தொழில்நுட்பக்கல்வி இயக்க வளாகம், சென்னை 600 025 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.