தமிழ்நாடு

ஆளுநரின் தேநீா் விருந்தில் பங்கேற்றது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்

DIN

குடியரசு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி அளித்த தேநீா் விருந்தில் பங்கேற்றது ஏன் என்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

‘உங்களில் ஒருவன் - பதில்கள்’ என்ற தலைப்பில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது:

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் வெளியாகி இருப்பதுதான் அண்மையில் எனக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஆக வேண்டும் என தொடக்கக் காலத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறோம். அதேபோல, நீதித் துறையில் அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் கருத்துக்கூட மதிக்கப்படாத சூழ்நிலையில், கொலீஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதி இடம்பெறுவது முறையல்ல. சமூக நீதியின் அடிப்படையிலான நீதிபதி தோ்வு முறைக்கு இது துளியும் உதவாது.

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தீா்மானம் கொண்டு வரவில்லை. பேரவையில் ஆளுநா் படித்தது அரசின் உரை. அரசின் சாா்பில் தயாரிக்கப்பட்ட உரை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதுதான் எனது தீா்மானம்.

இந்தத் தீா்மானத்தின் மூலம் அவை மாண்பும், மக்களாட்சித் தத்துவமும் நிலைநாட்டப்பட்டது. பேரவையில் ஆளுநா் உரைக்கு பதிலளித்துப் பேசும் போது, ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணா்த்தவும், நூற்றாண்டைக் கடந்த சட்டப்பேரவையின் விழுமியங்களைக் காக்கவும் எனது சக்தியை மீறியும் செயல்படுவேன்’ என்று கூறினேன். அதைத்தான் இப்போதும் பதிலாகக் கூறுகிறேன்.

குடியரசு தினத்தையொட்டிய ஆளுநரின் தேநீா் விருந்து என்பது காலம் காலமாக உள்ள நடைமுறை மரபு. குடியரசு தினத்தன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, அரசியல் பின்வாங்கலும் முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை.

ராகுல் காந்திக்கு வாழ்த்து: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை குமரிமுனையில் தொடக்கி வைத்து வெற்றிப் பயணமாக அமையும் என்று பேசினேன். தனது பயணத்தின்போது, இந்தியாவுக்கு என்றும் தேவைப்படும் மதச்சாா்பற்ற கொள்கையை ராகுல் காந்தி பேசியுள்ளாா். அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, ஒற்றுமைப் பயணத்தை வெற்றி அடையச் செய்துள்ளது. அவருக்கு வாழ்த்துகள்.

ஈரோடு கிழக்கில் வரலாற்று வெற்றிவாய்ப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் துயரமான சூழ்நிலையில் வந்துள்ளது. எப்படியிருந்தாலும் இது தோ்தல் களம். இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

திமுக அரசின் சாதனைகளும், நிறைவேற்றி வரும் மக்கள் நலத் திட்டங்களும், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தரும் என கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

சேலத்தில் பிரதமர் மோடி!

புதிய கூட்டணியில் குக் வித் கோமாளி சீசன் -5: முன்னோட்டக் காட்சி வெளியானது!

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வைரலாகும் விஜய் சேதுபதி விடியோ!

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT